கருத்து வேறுபாடு பிரபல நடிகைக்கு எதிராக விவாகரத்து கோரி கணவர் வழக்கு

கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரபல மலையாள நடிகை ஆன் அகஸ்டினை விவாகரத்து செய்ய அவரது காதல் கணவர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக ஆலப்புழாவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்தவர் அகஸ்டின். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் மரணமடைந்தார். இவரது மகள் ஆன் அகஸ்டின். இவர் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான எல்சம்மா எந்ந ஆண் குட்டி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதன் பின்னர் அர்ஜுனன் சாட்சி, திரீ கிங்ஸ், ஆர்டினரி, வாத்தியார், பாப்பின்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த சோலோ என்ற படம் தமிழிலும் வெளியானது. ஆர்டிஸ்ட் என்ற படத்தில் நடித்த இவருக்கு கடந்த 2013ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இந்நிலையில் இவர் மலையாள சினிமா கேமராமேன் ஜோமோன் டி ஜானை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் விவாகரத்து கோரி இருவரும் இணைந்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தீர்மானித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பின்னர் அதற்கு ஆன் அகஸ்டின் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஜோமோன் டி. ஜான் விவாகரத்து கோரி தனிப்பட்ட முறையில் ஆலப்புழா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

More News >>