மனைவிக்கு பிரசவம்.. நாடாளுமன்றத்தில் 9 நாள் லீவு கேட்ட எம்.பி.

மனைவிக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டியிருப்பதால் 9 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்மோகன் நாயுடு. இவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிப்.1ம் தேதி மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், ஜன.29ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை நாடாளுமன்றம் கூடும் 9 நாட்கள் தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராம்மோகன் நாயுடு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், நான் நாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு சட்டங்கள் குறித்த விவாதங்களிலும் பங்கேற்று பணியாற்றி வருபவன். தற்போது எனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஒரு வாரத்திற்குள் பிரசவிக்க உள்ளார். குழந்தை பிறக்கும் நாளில் நான் ஒரு நல்ல கணவராக எனது மனைவிக்கு அருகே இருந்து உதவிட விரும்புகிறேன். எனவே, ஜன.29ம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை நாடாளுமன்றம் கூடும் 9 நாட்களுக்கு எனக்கு விடுப்பு அளிக்க வேண்டும். பிப்.10ம் தேதி முதல் நான் கூட்டத் தொடரில் பங்கேற்பேன் என்று கூறியிருக்கிறார்.

More News >>