தலைவாழை இலையில் காளான் பிரியாணி ருசித்த ராகுல் காந்தி: உலகளவில் வைரலான வில்லேஜ் குக்கிங்!
சமையல் யூடியூப் சேனல் என்றால், வில்லேஜ் குக்கிங் என்ற சேனல் உலக சமையல் பிரியர்களுக்கு அறிந்த ஒன்றுதான். இருப்பினும், நேற்று இரவு முதல் இணையத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இதற்கு காரணம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தான். தமிழகத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே, தனது பயணத்தின்போது, சத்தமே இல்லாமல் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாடியுள்ளார்.
யூடியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் நடத்தி வரும் குழு சமைக்கும் இடத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். இவர்களுடன் கலந்து கொண்ட கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி ராகுல் உரையாடலை யூடியூப் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் ஓலைப்பாயில் அமர்ந்து குழுவினருடன் சகஜமாக காளான் பிரியாணியை தலைவாழை இலையில் சாப்பிட்டு ராகுல்காந்தி மகிழ்ந்தார். `நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு' என தனது ஃபீட் பேக்கையும் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார். ராகுலின் வருகை யூடியூப் குழுவினரை சந்தோஷத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வீடியோ நேற்று இரவு முதல் இணையதளத்தில் வைரலாகி, வில்லேஜ் குக்கிங் சேனல்மேலும் பிரபலமாகியுள்ளது.