ஏப்ரலில் புதிய முதல்வர்.. எடியூரப்பாவுக்கு மிரட்டல்.. கர்நாடக பாஜகவில் குழப்பம்..
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. அப்போது, அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தன்பக்கம் இழுத்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. காங்கிரசில் இருந்து வந்த காங்கிரசார் 15 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி தந்தார். இதில் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, பீஜப்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பசனகவுடா பாடீல் யட்னால் குமுறினார். அவர் மாநில அமைச்சர் பதவிக்காக டெல்லி மேலிடம் வரை சென்று முயற்சித்தும் கிடைக்காததால் ஆத்திரம் கொண்டார். கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கிவிட்டு புதிய முதல்வரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது என்று கடந்த அக்டோபரில் பேட்டி அளித்தார். அதனால் அவர் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் விலகினால் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்து விடும் சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா, பசனகவுடாவுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால், அப்படி தரவில்லை. இந்நிலையில், பசனகவுடா மீண்டும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் இனிமேல் எடியூரப்பாவிடம் மந்திரி பதவி கேட்டு பிச்சை எடுக்க மாட்டேன். ஏப்ரலில் யுகாதி பண்டிகையின் போது கர்நாடகாவில் புதிய முதல்வர் பொறுப்பேற்பார். எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வரின் அமைச்சரவையில் நான் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்றார். இதனால், கர்நாடகா பாஜகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. எடியூரப்பா ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக மேலிடம் அடுத்து என்ன முடிவெடுக்கும் என்று அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.