கமல் மகளை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்.. பழைய டிவிட் மெசேஜால் சிக்கல்..
பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போதைக்கு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற பிரமாண்ட படங்களில் நடித்தாலும் கன்னட நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் படம் போல் ஆக்ஷன் அதிரடி படத்தில் நடிக்க விரும்பினார். அவரது ரசிகர்களும் அவரிடமிருந்து அப்படியொரு படத்தை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். உடனடியாக அந்த திட்டத்தை நிறைவேற்ற கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த நீல் இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்தார் பிரபாஸ். உடனடியாக அவருக்கு கால்ஷீட் கொடுத்ததுடன் ஷுட்டிங்கில் பங்கேற்று நடித்தும் வருகிறார். தெலங்கானா பகுதியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. பிரபாஸை காண அக்கம் பக்கத்திலிருக்கும் கிராம மக்கள் அணி அணியாக திரண்டு படப்பிடிப்பு நடத்தும் இடத்தில் குவிந்திருக்கின்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இப்படத்தை விரைவாக நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளார். படத்துக்கு சலார் என பெயரிடப்பட்டிருக்கிறது. முன்னதாக பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் இப்படத்தின் படம் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நண்பரான யஷ் இப்பட பூஜையில் பங்கேற்க கர்நாடகாவிலிருந்து வந்திருந்தார். அவரை பிரபாஸ் வரவேற்றார். இருவரும் அருகருகே நிற்கும் புகைப்படத்தை போட்டி போட்டு படம் எடுத்தனர். அப்படங்கள் நெட்டில் வைரலானது. கே ஜி எஃப் 2 படத்துக்கு அமைத்தது போன்ற வித்தியாசமான அரங்கு சலார் படத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவரது பிறந்த நாளான்று சலார் படக்குழு இதனை அறிவித்துள்ளது. பிரபாஸுடன் ஸ்ருதி இணைவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தாலும் நெட்டிஸன்கள் சிலர் ஸ்ருதியை வம்புக்கிழுத்திருக்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஸ்ருதிஹாசன் கன்னட படத்தில் அறிமுகவுள்ளதாகவும் அதுகுறித்து தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசி வருவதாகவும் அவரைப்பற்றி கிசுகிசு பரவியது. அதற்கு பதில் அளித்த ஸ்ருதி எதிர்வரும் நாட்கள் நான் கன்னட படத்தில் நடிக்கும் எண்ணத்தில் இல்லை. அப்படி எந்த படத்தில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என தெரிவித்திருந்தார். அவர் 2017ம் ஆண்டு சொன்ன அந்த பதிவை இப்போது எடுத்து வைத்துக் கொண்டு நெட்டிஸன்கள், கன்னட பட தயாரிப்பாளர் தயாரிக்க கன்னட இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி என்று ஸ்ருதியிடம் கேட்டு வருகின்றனர். மேலும் கன்னட பட ரசிகர்கள், கன்னட மொழி படத்தில் நடிக்க விரும்பாத ஒரு நடிகையை ஏன் சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தீர்கள் என்று பட நிறுவனத்திடம் கேட்டு வருகின்றனர்.