பிரபல மலையாள பாடகர் கொரோனா பாதித்து மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோமதாஸ் (42) கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சோமதாஸ் (42). டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடகராக அறிமுகமான இவர், பின்னர் மேடை இசை கச்சேரிகளில் பாடி புகழ் பெற்றார். மிஸ்டர் பெர்பெக்ட், அண்ணாரக் கண்ணனும் தன்னால் ஆயது, மண்ணாங்கட்டயும் கரியிலயும் உள்பட ஏராளமான மலையாள படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.
கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோமதாசை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது.
இதையடுத்து இன்று அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் சோமதாசுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். பாடகர் சோமதாசின் மறைவுக்கு மலையாள சினிமா திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.