இளையராஜா பற்றி சர்ச்சை கருத்து சொன்னவர் வெற்றி.. இசை கலைஞர்கள் யூனியன் தேர்தல் முடிவுகள்..
சமீபத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இது கோர்ட் வரை சென்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இளைராஜாவுக்கு ஆதராவாக திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா பேட்டி அளித்தார். அப்போது உணர்ச்சி வேகத்தில் இசைஞானி இளையராஜாவை அவமானப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்தத்துடன் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தேசிய மற்றும் மாநில விருதுகளை திருப்பி தரும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இளையராஜா உடனடியாக மறுப்பு தெரிவித்தார். விருது திருப்பி தருவதாக நான் யாரிடமும் கூறவில்லை. அது தவறான தகவல் என்றார். இதையடுத்து தினா கூறும்போது உணர்ச்சி வசப்பட்டு வாய் தவறி சொல்லிவிட்டேன். இளையராஜா அப்படி எதுவும் கூறவில்லை என்று தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் திரைப்பட இசை கலைஞர்கள் யூனியன் தேர்தல் நடந்தது. இதில் தினா மற்றும் அவரது தலையிலான அணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதுபற்றி இசை கலைஞர்கள் யூனியன் தலைவர் தினா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2021-ஜனவரி 24 ஆம் தேதி அன்று, வடபழனி ஆற்காடு ரோட்டில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடந்தது. இதில் தினா தலைமையிலான அணி பெரும்பாலான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்றது. திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக மீண்டும் இசையமைப்பாளர் தினா அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரது அணியை சேர்ந்த ஜோனாபக் தகுமார் எஸ்.டி. பொதுச்செயலாளராகவும், ஐ.மகேஷ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவர்கள் , இணைச்செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என தினா அணியை சேர்ந்த அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், தேவி ஸ்ரீ பிரசாத் , சபேஷ் முரளி, இசைக்கலை ஞர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் , இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர் ,கே. பாக்யராஜ் , வாசு ராவ், சம்பத் செல்வம், பரணி, சிற்பி , ரமேஷ் விநாயகம், சி. சத்யா , மாதவபெத்தி சுரேஸ், எஸ்.பி.வெங்கடேஷ் , நரஹரி, தஷி, ஸ்ரீ காந்த் தேவா, ஹரி கிருஷ்ணா தாஜ் நூர், சிவாஜி ராஜா, வயலின் கலைஞர் கல்யாண சுந்தரம் , சாக்ஸ் கலைஞர் எம்.எஸ்.வி. ராஜா, செல்லலோ கலைஞர் குன்னக்குடி வைத்யநாதன் புதல்வர் வி ஆர்.சேகர், கிதார் கலைஞர் சந்திர சேகர் , பாடகர் கிருஷ்ண ராஜ், எஸ்.என். சுரேந்தர், கல்பனா ராகவேந்தர், மாலதி லக்ஷ்மன், கிரேஸ் கருணாஸ், பத்மலதா. ஸ்ரீனிவாஸ். கீ போர்டு கலைஞர் தினேஷ் , கிரண் அனைவரும் கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்தனர். தேர்தல் அதிகாரியாக இயக்கு னர் டி.கே. சண்முக சுந்தரம், துணைத்தேர்தல் அதிகாரியாக ரமேஷ் பிரபாகரன், தேர்தலை அமைதியான முறையில் சிறப்பாக நடத்தி தந்தனர். ஒட்டு மொத்த இசைக்கலைஞர்களும் தினா தலைமையிலான அணி வெற்றி பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி பெப்சி தலைவர் செல்வமணி முன்னிலையில் விரைவில் நடக்கவிருக்கிறது. இவ்வாறு தினா கூறி உள்ளார்.