கர்ணன் படம் தியேட்டர் ரிலீஸுக்கு டீஸர் வெளியீடு.. தயாரிப்பாளருக்கு தனுஷ் நன்றி..
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பட்டாஸ் படம் வெளியானது. இப்படத்தை ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இதில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்தார். ஹீரோயினாக மெஹரீன் பிர்சடா நடித்தார். தனுஷ் தாய் மற்றும் ஜோடியாக சினேகா நடித்திருந்தார். இப்படத்தையடுத்து ஜெகமே தந்திரம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொரோனா ஊரடங்கால் படம் வெளியாகமலிருந்தது. தற்போது வெளியீடுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமாக உருவாகிறது கர்ணன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
யோகிபாபு, நட்டி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. கர்ணன் என்று தலைப்பு வைத்தற்கு சிவாஜி சமூக நல பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவாஜி நடித்த புராண படம் கர்ணன். அந்த டைட்டிலை தனுஷ் படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர். தற்போது தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் முடிவடைந்திருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் கர்ணன் படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளதாக இன்று டீஸர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது படக்குழு, கர்ணன் படத்தை தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
இதுகுறித்து அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் மாதம் கர்ணன் படம் தியேட்டரில் வெளியாகிறது. இது இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் தேவையான விஷயம் மட்டுமல்ல ஊக்கம் தருவதாகவும் உள்ளது. தியேட்டர் அதிபர்கள், டிஸ்டிரி பியூட்டர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இப்படத்தை தியேட்டரில் வெளியிடும் தாணு சாருக்கு நன்றி. என்னுடைய ரசிகர்கள் சார்பிலும் தாணுசாருக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது அன்பு வணக்கம், அன்பை பரப்புங்கள். இவ்வாறு தனுஷ் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மேலும் அட்ரங்கிரே என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சாரா அலிகான் ஹீரோயின் மற்றொரு ஹீரோவாக அக்ஷய்குமார் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் தனுஷ்.