ஒடிடிக்கு போன தனுஷ் படத்தால் பரபரப்பு..
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டில் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அடுத்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாக தெரியாத நிலையில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெயம் ரவி நடித்த பூமி, ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் போன்ற பல படங்கள் ஒடிடியில் வெளியானது. ஒடிடியில் தங்கள் படங்களை வெளியிடும் பட நிறுவனங்களின் அடுத்தடுத்து தயாரிக்கும் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது, பலர் வேலை இழந்துள்ளனர்.
எனவே தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரி வந்தனர். இந்த நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படம் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படமும் ஒடிடியில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுவந்தது. ஆனால் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று விஜய்க்கும் தனுஷுக்கும் தியேட்டர் காரர்கள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று இரண்டு படங்களும் ஒடிடி தளத்துக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்றதால் மறுபடியும் மாஸ்டர், ஜெகமே தந்திரம் தள்ளிப்போனது. 100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் படம் பொங்கல் தினத்தை யொட்டி வெளியிடப்பட்டது.
முதலில் 100 சதவீத டிக்கெட்டுக்கு அனுமதி கொடுத்த அரசு எதிர்ப்பு எழுந்ததால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. இந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ரூ 200 கோடி வசூல் சாதனை செய்தது. ஆனால் ஜெகமே தந்திரம் ரிலீஸ் ஆகவில்லை. பிப்ரவரியில் இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இப்படம் ஒடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களையும். தியேட்டர் அதிபர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகவிருக்கிறது. ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூம் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் எதுவும் வெளியிடவில்லை. நெடில் மட்டும் ஜெகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் பற்றி போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.