சமந்தா நடித்த வெப் சீரிஸ் திடீர் தள்ளிவைப்பு.. என்ன பிரச்னை?
நடிகை சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாராவும் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் சமந்தா. இதற்கிடையில் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்தது. அமேசான் பிரைமில் ஏற்கனவே தி ஃபேமலி மேன் என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், ஷரிப் ஹஸ்மி, பிரியாமணி போன்ற பலர் நடித்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவாக முடிவானது. இந்தி பட இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிமே இதனை இயக்குகின்றனர். 2ம் பாகத்தில் புதிய கதாபாத்திரத்தை புகுத்த இயக்குனர்கள் முடிவு செய்தனர். அதற்காக பிரபல நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து சமந்தாவை அணுகினார்கள்.
இந்தி படங்களில் நடிக்காவிட்டாலும் இந்தி வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்தது சமந்தாவுக்கு மகிழ்ச்சி, ஆனால் கதை பிடிக்க வேண்டுமே என்று எண்ணினார். சீரிஸ் கதை பற்றி இயக்குனர்களிடம் கேட்ட போது இது ஒரு நெகடிவ் வேடம், நீங்கள் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும் என்றனர். அது சமந்தாவுக்கு புதிதாக இருந்தது. இதுபோன்ற வேடம் செய்ததில்லையே ரசிகர்களுக்கும் தனது அடுத்த பக்கத்தை காட்டலாம் என்று எண்ணி நடிக்க ஒகே சொன்னார். அதன்படி நடித்தும் முடித்தார். இந்த ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று சமந்தா நடித்துள்ள வெப் சீரிஸ் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தள்ளிவைப்புக்கான காரணம் பற்றி அதிகாரப் பூர்வாக அறிவிக்காவிட்டாலும் சில தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே அமேசானில் வெளியான சயீப் அலிகான் நடித்துள்ள தாண்டவ் சீரிஸால் வடக்கில் சிக்கல் எழுத்துள்ளது. கடவுளை இழுவுபடுத்தி சீரியலில் காட்சிகள் இருப்பதாக கூறி இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாண்டவ் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தினர். மேலும் கடவுளை இழுவு படுத்தியவரின் நாக்கை அறுத்தால் ரூ 1 கோடி பரிசு தரப்படும் என்று மகராஷ்டிரா இந்து மத தலைவர் ஒருவர் அறிவித்தார். இதுபோன்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய தயாரிப்பாளர் அலி அப்பாஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். கடவுளை இழிவாக காட்டும் எண்ணம் இல்லை அதுபோன்ற காட்சி இருந்தால் உடனடியாக நீக்கப்படும் என்றார். ஆனாலும் பிரச்னை ஒய்ந்தபாடில்லை. தாண்டவ் சீரிசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. சிக்கலான இந்த நேரத்தில் ஃபேமலி மேன் 2 சீரிஸை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என்பதால் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.