இந்தியாவில் முதன் முறை பேப்பரே இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
இந்தியாவிலேயே முதல் முறையாக பேப்பர் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலியில் பட்ஜெட் விபரங்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம். வழக்கமாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் அது தொடர்பான விவரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தக வடிவில் வழங்கப்படும். இதற்காக நூற்றுக்கணக்கில் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் தயார் செய்யப்படும். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக லாரிகளில் மூட்டைகளாக கட்டப்பட்டு இவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதாலும், செலவை மிச்சப்படுத்துவது மற்றும் பேப்பர் பயன்பாட்டை குறைப்பதற்காகவும் இந்த வருடம் முதன்முதலாக பேப்பர் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட் போன்களுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தவுடன் இந்த செயலியில் முழு விவரங்களும் கிடைக்கும். பட்ஜெட் இணையதளத்தில் கிடைக்கும் அனைத்து விவரங்களையும் இந்த செயலியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். முந்தைய வருடங்களில் உள்ள பட்ஜெட் விவரங்கள் குறித்தும், நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சும் இந்த செயலியில் கிடைக்கும். வரி தொடர்பான விவரங்கள் மற்றும் நிதி மசோதா ஆகியவையும் இதில் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த வருடம் முதல் தான் பேப்பர் இல்லாத பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.