மிந்த்ராவின் லோகோ ஆபாசம் போலீசில் புகார் லோகோவை மாற்ற சம்மதம்
ஆன்லைன் ஆடை வர்த்தக நிறுவனமான மிந்த்ராவின் லோகோ பெண்களை அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாக இருப்பதாக மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு மாதத்திற்குள் லோகோவை மாற்ற மிந்த்ரா நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் மிந்த்ரா என்ற ஆன்லைன் ஆடை நிறுவனம் முன்னணியில் உள்ள ஆன்லைன் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கதாகும். பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நிறுவனம் சமீபத்தில் ஐந்தே நாட்களில் 1 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மித்ராவின் லோகோ பெண்களை அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாக இருப்பதாக மும்பையில் உள்ள அவஸ்தா அறக்கட்டளையை சேர்ந்த நாஸ் படேல் என்ற பெண் மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். மும்பை சைபர் கிரைம் போலீசில் அவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பது: மிந்த்ராவின் லோகோ பெண்களின் உடலை அவமானப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லோகோவை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மிந்த்ரா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பரிசீலித்த சைபர் கிரைம் போலீசார் இதுதொடர்பாக மிந்த்ரா நிறுவனத்திற்கு இ மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து ஒரு மாதத்திற்குள் லோகோவை மாற்றுவதாக அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. விளம்பரம், பார்சல்கள் உட்பட மாற்றம் ஏற்படுத்த வேண்டி இருப்பதால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. விரைவில் இணையதளங்களிலும் புதிய லோகோ மாற்றம் செய்யப்படும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து சமூக வலைத்தளங்களில் தான் புகார் தெரிவித்துள்ள போதிலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதை கண்டு கொள்ளாததால் தான் போலீசில் புகார் செய்ததாக நாஸ் படேல் தெரிவித்தார். ஆனால் நாஸ் படேல் விளம்பரத்திற்காகவே இந்த புகாரை கொடுத்துள்ளார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.