ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய துறவி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் துறவி ஒருவர். ரிஷிகேஷை சேர்ந்த துறவி சங்கரதாஸ். கடந்த 60 வருடங்களாக ஒரு குகையில் வசித்துவருகிறார். 83 வயதான சங்கர் தாஸ், உள்ளூர் மக்களால் ஃபக்கத் பாபா என்றழைக்கப்படுகிறார். அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக இவர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார். ரிஷிகேஷில் உள்ள தனது குருநாதர் தாத் வாலே பாபாவின் குகைக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மூலம் சேர்த்து வைத்து இந்த தொகை என்று சொல்கிறார் சுவாமி சங்கர் தாஸ்.

சுவாமி சங்கர் தாஸ் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையுடன் ரிஷிகேஷில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு வந்தார். வங்கி அதிகாரிகளால் அதை நம்ப முடியவில்லை. அவரது கணக்கை சரிப்பார்த்த போதுதான் மேல் பணம் இருந்தது ஊர்ஜிதமானது. இருப்பினும் வங்கி அதிகாரிகள் நன்கொடையை அதிகாரப்பூர்வமாக பெற்று கொள்ள ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை வங்கிக்கு வரவழைத்தனர். அதன்படி வங்கிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் சுதாமா சிங்கலிடம் சுவாமி சங்கர் தாஸ் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்தார். அப்போது பல ஆண்டுகளாக ராமர் கோவில் கட்டுவதற்காக இந்த தொகையை சேகரித்து வந்ததாக சங்கர் தாஸ் தெரிவித்தார்.

காசோலையை பெற்று கொண்ட சுதாமா சிங்கல் சுவாமி சங்கர் தாஸிடம் ரசீது கொடுத்துள்ளார். தான் நன்கொடை வழங்கிய விபரத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் நான் எதையும் விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்று சுவாமி சங்கரதாஸ் சொல்ல வங்கி அதிகாரிகளும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் இதைமக்களிடம் தெரிவித்தால் தான் மற்றவர்களும் உங்களை போல நன்கொடை கொடுக்க முன்வருவார்கள் என்று சொல்ல அதன் பிறகே சங்கரதாஸ் சம்மதம் சொல்லி விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது. சுவாமி சங்கர் தாஸ் பக்தர்கள் தரும் நன்கொடை மூலம் எழைகளுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

More News >>