டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ள அதிமுக திடீர் நிபந்தனை
டிடிவி தினகரன், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு தம்மை மீண்டும் கட்சியில் ஒரு தொண்டனாக சேர்த்துக்கொள்ளுமாறு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் கட்சி அதுபற்றி பரிசீலனை செய்யும் எனத் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் தங்கள் சுயநலத்துக்காக இப்படி சொல்லிக் கொள்வர்.
அதிமுகவில் உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. அதிமுகவை கைப்பற்ற டிடிவி.தினகரன் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பார்த்தார். அது முடியவில்லை. இப்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்னுடன் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் தினகரன். அதிமுக-அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு கே.பி.முனுசாமி ஒரு கட்சியில் தவறு செய்துவிட்டு அந்த கட்சியைவிட்டு வெளியே சென்றவர்கள், தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கடிதம் தந்தால், தலைமை அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிற பட்சத்தில் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இது அதிமுக என்ற இயக்கத்தின் மரபு. இந்த மரபின்படி வேண்டுமானால் டிடிவி தினகரன், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, தன்னை கட்சியில் ஒரு தொண்டனாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். டிடிவி தினகரன், அப்படி கடிதம் கொடுத்தால் கட்சி அதுபற்றி பரிசீலனை செய்யும் என்றார்.