மியான்மரில் ராணுவப் புரட்சி.. ஆங்சான்சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிப்பு..
மியான்மர் நாட்டில் இன்று(பிப்.1) அதிகாலையில் ஆங்சான் சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அரசு பொறுப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பின்னர், பல ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த பெண் தலைவர் ஆங்சான் சூயி விடுவிக்கப்பட்டு, தேர்தலும் நடத்தப்பட்டது.
தற்போது மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதில், மொத்தமுள்ள 642 இடங்களுக்கு ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அந்நாட்டில் நாடாளுமன்றத்திலும் ராணுவத்தின் பிரதிநிதிகள்தான் அதிகமாக இருப்பார்கள். இந்த முறை ஆங்சான் சூயி கூட்டணியினர் அதிகமாக வென்றுள்ளனர். எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியது. இந்நிலையில், ராணுவம் அந்நாட்டு அரசு நிர்வாகத்தை திடீரென கையில் எடுத்து கொண்டிருக்கிறது.
அந்நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதுடன், இன்று அதிகாலையில் ஆங்சான் சூயி உள்பட பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதை ஆங்சாங் சூயி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், தலைநகர் நேபிடாலில் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, மியாமன்மரில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் தவறினால் அமெரிக்கா தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.