இந்தியில் வில்லனாக நடிக்கும் கோலிவுட் ஹீரோ

கோலிவுட்டிலிருந்து இந்திக்கு செல்லும் ஹீரோக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்தனர். 1976ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு சுமார் 10 வருடம் கழித்துத் தான் அதாவது 1985ம் ஆண்டு ஜான் ஜானி ஜனார்தன் படம் மூலம் இந்தியில் என்ட்ரி ஆனார். இயக்குனர் டி.ராம ராவ் இப்படத்தை இயக்கினார். பிறகு வஃபாடியர், கிரப்தார், பிவாஃபாய், பகவான் தாதா போன்ற படங்களில் நடித்தார். இந்தியில் பல படங்களில் நடித்தாலும் சோலோ ஹீரோவாக அவரால் அங்கு நிலைக்க முடியவில்லை. பிறகு இந்தியில் கவனத்தை குறைத்துக்கொண்டு தமிழ் படங்களில் கவனத்தை திருப்பினார். ரஜினிக்கு முன்னதாகவே 1977ம் ஆண்டு கமல்ஹாசன் ஆயினா என்ற இந்தி படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அதன்பிறகு 1982ம் ஆண்டு டு கமால் ஹோகயா, 1983ம் ஆண்டு சத்மா படத்திலும் பின்னர் யாத்கார், கரிஷ்மா, கிராப்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவராலும் அங்கு சோலோ ஹீரோவாக நிலைக்க முடியவில்லை. அவ்வப்போது வந்த படங்களை ஏற்று நடித்தவர் பிறகு தமிழிலேயே கவனத்தை திருப்பினார். நடிகர் அஜீத்குமார் 2001ம் ஆண்டு அசோகா என்ற இந்தி படத்தில் நடித்தார் அதன்பிறகு 2012ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த இங்லிஷ் விங்லிஷ் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். 2012ம் ஆண்டு ரவுடி ரத்தோர் என்ற இந்தி படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பிறகு இவர்களும் இந்தி பக்கம் கவனத்தை செலுத்தவில்லை. தற்போது நடிகர் தனுஷ் இந்தியில் கவனம் செலுத்தி நடிக்கிறார். ஏற்கனவே ராஞ்சனா, ஷ்மிதாப் ஆகிய படங்களில் நடித்ததுடன் தற்போது 3வதாக அட்ரங்கிரே இந்தி படத்தில் நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் இந்திக்கு செல்கிறார்.

தமிழில் விஷால் நடித்த இரும்பு திரைபடம் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் விஷால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் சோனு சூட் நடிக்கிறார். இப்படத்தை தமிழில் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். இப்படம் மூலம் வில்லனாக விஷால் இந்திக்கு என்ட்ரி தருகிறார். ஆனால் இரும்பு திரை படத்தில் அர்ஜூன் ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் யார் ஏற்பது என்பது முடிவாகவில்லை. இதுபற்றிய முழு விவரங்கள் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது தமிழில் சக்ரா படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். முன்னதாக இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து சக்ரா படமும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

More News >>