சூப்பர் ஆஃபர்..! ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டால் 10 கிராம் தங்கம் இலவசமாம்..
கள்ளக்குறிச்சியில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 10 கிராம் தங்கம் இலவசம் என்கின்ற போட்டி மிக விமர்சியாக நடைபெற்றது. கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த வருடத்தில் இருந்து பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல இளைஞர்கள் மும்முரமாக கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை தட்டி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஈட்டிங் சேலஞ் பாய்ஸ் மற்றும் ஜே.சி.ஐ சின்ன சேலம் ஆகிய இரண்டு அமைப்பும் சேர்த்து ஒரு போட்டியை சிறப்பாக நடத்தியது. அதாவது யார் ஒருவர் 1 கிலோ பிரியாணியை குறைந்த நேரத்தில் முதலில் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு தங்கம், வெள்ளி போன்றவை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து இந்த போட்டியில் 30 இளைஞர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் அடித்து பிடித்து போட்டியில் தீவிரமாக கலந்து கொண்டனர்.
எதிர்பார்த்ததை விட வெறும் நான்கரை நிமிடத்திற்க்குள் வாழை இலையில் இருந்த ஒரு கிலோ பிரியாணியை அசுர வேகத்தில் சாப்பிட்டு விட்டார் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ராமகிருஷ்ணன் என்பவர். இவருக்கு 10 கிராம் தங்கமும், இவரை தொடர்ந்து போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கு 10 கிராம் வெள்ளியும் மூன்றாவது இடத்தை பிடித்தவருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளும் பரிசாக வழங்கப்பட்டது.