அனைத்துக்கும் நன்றி அம்மா.. தாய் மறைவு குறித்து முருகன் அஸ்வின் உருக்கம்!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் தனது தாயார் மறைவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் அணி சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் பரோடா அணியை வீழ்ச்சி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில் சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் சையத் முஷ்டக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்புதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகன் அஸ்வினின் தாயார் காலமானார்.
இந்நிலையில், சையத் முஷ்டக் அலி கோப்பையை வென்ற நிலையில், முருகன் அஸ்வின் தனது தாயார் மறைவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார். முருகன் பதிவிட்ட பதிவில், ஒரு மாதத்துக்கு முன்பாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக என் அம்மா இறந்தார். அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. துரதிஷ்டவசமாக அவரை நான் இழந்துவிட்டேன். என் அம்மாவுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். என் அம்மாவின் கிரிக்கெட் ஆர்வம்தான் என்னையும் கிரிக்கெட் விளையாட தூண்டியது. எனக்கு சிறுவயதில் ஏராளமான கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்து, ரப்பர் பந்துகளை அவர் வாங்கிக்கொடுப்பார்.
அதில் விளையாடியே நான் என் கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்டேன். அதுதான் கிரிக்கெட் மீது எனக்கு விருப்பம் வர காரணமாகவும் அமைந்தது. எனக்காக அதிக நேரத்தை ஒதுக்கி என்னை பயிற்சிக்கு அவர்தான் அழைத்துச் செல்வார். என் பள்ளியிலிருந்து அனுமதி பெற்று கிரிக்கெட் போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், எனது அம்மா காலை 4 மணிக்கு எழுந்து அனைவருக்கும் சமைத்துவிட்டு காலை 7 மணிக்கு அலுவலகம் புறப்படுவார். பின்பு மாலை 7 மணிக்கு வீடு திரும்பி அனைவருக்கும் சமைப்பார். தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே இதை சலிப்பின்றி செய்தார். அவர்தான் என்னுடைய முதல் ரசிகரும் விமர்சகரும். நான் எப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றே விரும்புவார்.
அம்மா இறந்த அடுத்த சில தினங்களிலேயே சையத் முஷ்டக் அலி கோப்பைக்கு புறப்படவேண்டிய சூழ்நிலை.ஒரு மகனாக 13 நாள் சடங்குகள் செய்ய வேண்டியது இருந்தது. ஆனால் என்னுடைய அப்பா, மனைவி, சகோதரிகள் நான் சையத் முஷ்டக் அலி கோப்பையில் விளையாட வேண்டும் என விரும்பினார்கள். அதைத்தான் என் அம்மாவும் விரும்பியிருப்பார்கள் என கூறி என்னை போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வெற்றி கோப்பை உங்களுக்கானது அம்மா. என் அம்மா இப்போது பெருமையாக இருப்பார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் நான் என்பதிலும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அனைத்துக்கும் நன்றி அம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.