அடையாளம் தெரியாத சடலத்தை தோளில் சுமந்த பெண் போலீஸ் அதிகாரி : ஆந்திர அசத்தல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிமீ. தூரம் தோளில் சுமந்து இறுதிச்சடங்கிற்கு செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அடவி கொத்தூர் கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காசிபுக்கு காவல் நிலைய பெண் எஸ்.ஐ. சிரிஷா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இறந்து கிடந்தது யார் என்று அந்த பகுதி மக்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்ய எஸ்.ஐ. சிரிஷா ஆயத்தமானார். ஆனால் சடலத்தை எடுப்பதற்கு அங்கிருந்த மக்களில் யாருமே தயாராக இல்லை. இதனால் எஸ்.ஐ.சிரிஷா தன்னுடன் உதவிக்கு வந்த ஒரே ஒருவரின் உதவியுடன் ஒரு ஸ்ட்ரச்சரில் சடலத்தை வைத்து தோளிலே சுமந்து எடுத்து வந்தார். சுமார் 2. கிலோமீட்டர் தூரம் கடந்து ஊருக்கு வெளியே கொண்டு வந்தார்.
பின்னர் ஒரு தன்னார்வ அமைப்பின் மூலம் அந்த சடலத்திற்கு வழக்கமான மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்ப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைக்கண்ட ஆந்திர மாநில டிஜிபி கெளதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.