கேப்டன் பதவியை விட்டு கோஹ்லி விலக வேண்டும் அவரைப் பார்த்து சக வீரர்கள் பயப்படுகின்றனர் பிரபல ஆஸ்திரேலிய வீரர் குற்றச்சாட்டு
கேப்டன் பதவியை விராட் கோஹ்லி ராஜினாமா செய்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவரைப் பார்த்து சக வீரர்கள் பயந்து நடுங்குகின்றனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் லீ கூறியுள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு பின்னர் விராட் கோஹ்லியை கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றி, அவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானேவை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா படுதோல்வி அடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விராட் கோஹ்லி விளையாடினார். கோஹ்லி, ரோகித் சர்மா, ரகானே, புஜாரா உள்பட பல முன்னணி வீரர்கள் அணியில் இருந்தும் அந்தப் போட்டியில் இந்தியா 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக மோசமான ஒரு சாதனையை படைத்தது. இந்த போட்டிக்குப் பின்னர் கோஹ்லி தன்னுடைய மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பினார்.
இதன் பிறகு அடுத்து நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்றார். விராட் கோஹ்லி இல்லாததால் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவும் என்றே பலரும் கருதினர். ஆனால் அந்தத் தொடரையே இந்தியா வெல்லும் என்று யாரும் அப்போது கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 2வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்து தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த சரித்திர வெற்றிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் லீ, விராட் கோஹ்லி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விராட் கோஹ்லி உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சக வீரர்கள் அனைவரும் அவரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் கோஹ்லி தன்னுடைய சக வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் விளையாட்டு திறன் தான் அவர்களை அச்சப்படுத்துகிறது. அதே வீரர்கள் ரகானேவின் கீழ் விளையாடும் போது சற்று நிம்மதியுடன் விளையாடுவதாக எனக்கு தோன்றுகிறது. கோஹ்லியுடன் விளையாடும் போது ஒரு எல்லைக்கு மேல் சக வீரர்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. விளையாட்டை மிக சிறப்பான முறையில் அணுக வேண்டும் என்று கோஹ்லி விரும்புகிறார். வீரர்கள் நல்ல உடல் திறனுடன் இருக்க வேண்டும், மைதானத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பன போன்ற பல விருப்பங்கள் அவருக்கு உள்ளது. இதனால் கோஹ்லி கேப்டன் பொறுப்பில் இருக்கும் போது சக வீரர்கள் மிகவும் பயப்படுகின்றனர். எனவே அவர் தன்னுடைய கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். நான் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்தால் கண்டிப்பாக கேப்டன் பொறுப்பை ரகானேவுக்குத் தான் கொடுப்பேன். அவர் பேட்ஸ்மேன் என்ற முறையில் விளையாடுவது தான் இந்திய அணிக்கு நல்லது. ஆனால் கேப்டன் பொறுப்பை விட்டு கோஹ்லி விலக மாட்டார் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.