ராமர் கோயில் கட்ட திரட்டும் நிதி எங்கே போகிறது? கேள்வி கேட்ட எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தரப்படும் நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பரக்காலா தொகுதி எம்.எல்.ஏ. தர்மா ரெட்டி. இவர் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர். நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய தர்மா ரெட்டி, ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்கப்படும் நன்கொடை எங்கே போகிறது என்று தெரியவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக பிரதமர் மோடி இந்த நிதி தொடர்பான விவரங்களை வெளியிட ஆவன செய்ய வேண்டும் என்று பேசி இருந்தார்.

தர்மா ரெட்டியின் இந்த பேச்சு அப்பகுதியை சேர்ந்த பாஜகவினரை கொதிப்படைய வைத்தது. ஆவேசம் அடைந்த பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இரவு பரக்காலவில் உள்ள எம்.எல்.ஏ தர்மா ரெட்டியின் வீட்டிற்கு திரண்டு வந்தனர் . ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள், கட்டைகள், முட்டை ஆகியவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே தங்கள் கட்சி எம்எல்ஏ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். போலீசார் அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா மாநில அமைச்சரும் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ஆர் கூறுகையில் பொறுப்பான அரசியல் கட்சி என்பதால் நாங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியினர் இதே போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசி இருக்கிறார். சம்பவம் நடந்த எம்எல்ஏ வீட்டுமுன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>