போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள் பிப். 6ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல்

போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 6ம் தேதி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், 2 மாதத்திற்கு மேலாகியும் தங்களது போராட்டத்தை இதுவரை வாபஸ் பெறவில்லை. எந்தக் காரணம் கொண்டும் சட்டங்களை வாபஸ் பெறப் போவதில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. சட்டங்களை வாபஸ் பெறாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று விவசாய சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் விவசாயிகள் அதற்கு மசியவில்லை. நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.இதன்படி நாடு முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ஒருங்கிணைந்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. அன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கும் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி புதிய சட்டங்கள் குறித்து சபையை நிறுத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்று கூறி ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையே பட்ஜெட் தினமான நேற்று விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தலாம் எனப் போலீசுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லியில் பல்வேறு முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. டெல்லி முழுவதும் மிகப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீசாருக்கு டெல்லி போலீஸ் நிவாரண உதவி அறிவித்துள்ளது. மிகப் பலத்த காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடந்த மோதலில் 394 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், 30 போலீஸ் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை 44 வழக்குகளில் 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More News >>