கொரோனா பாதிப்பு குறையவில்லை கேரளா, மகாராஷ்டிராவில் மத்தியக் குழு மீண்டும் ஆய்வு நடத்த முடிவு
இந்தியாவில் மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் நோயாளிகள் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை. இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் மத்திய சுகாதாரத் துறை மீண்டும் ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளது.இந்தியாவில் கொரோனா நோய் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,635 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
இதையடுத்து இதுவரை இந்தியாவில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,07,66,245 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதித்த 96 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,54,486 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் கணக்கின் படி தற்போது இந்தியாவில் 1,63,553 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,04,48,406 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இதுவரை மிக அதிக எண்ணிக்கையில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை 20,28,347 பேருக்கு நோய் பரவியுள்ளது.
நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும், ஆந்திரா 4வது இடத்திலும், தமிழ்நாடு 5வது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 8,38,842 பேருக்கு நோய் பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நோய் பரவல் வேகமாகக் குறைந்து வருகின்ற போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை. கேரளாவில் கடந்த சில மாதங்களாக நோயாளிகள் எண்ணிக்கை தினமும் சராசரியாக 5,500 க்கும் மேல் உள்ளது. தற்போது கேரளாவில் மட்டும் 69,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,760 ஆகும். இந்தியாவில் தற்போதுள்ள நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 70 சதவீதம் ஆகும். இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை தீர்மானித்துள்ளது. விரைவில் மத்திய சுகாதார குழு இந்த இரு மாநிலங்களுக்கும் சென்று நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளது.