ராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரால் மீள முடியாதது ஏன்?
ஜனநாயகம் என்பது மியான்மர் மக்களுக்கு இப்போதும் ஒரு கனவாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருந்து மீண்டு ஜனநாயக பாதைக்கு செல்ல விரும்பிய இந்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியாக ராணுவ ஆட்சி வந்துள்ளது.1962ம் ஆண்டிலிருந்து சுமார் 50 வருடங்கள் ராணுவம் தான் மியான்மரை ஆட்சி செய்து வந்தது. கடந்த 10 வருடங்களுக்கு முன் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போதும் கூட ஜனநாயகத்தின் கைகளில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பது தான் மிகவும் வேதனையான ஒன்றாகும்.
பல ஆண்டுகளாக ஜனநாயகத்திற்காக போராடி வந்த ஆங் சாங் சூகி உட்பட தலைவர்கள் தங்களுக்கு எப்படியாவது அதிகாரம் கிடைக்குமே என்பதற்காக வேறு வழியில்லாமல் ராணுவத்துடன் ஒரு நூதன உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டனர். அந்த உடன்பாட்டின் படி நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இடங்களை நாங்கள் தான் நிரப்புவோம் என்று ராணுவம் கூறியது. அதற்கு ஆன் சான் சூகி போன்ற தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இதன்படி எல்லை விவகாரத் துறை, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 3 மிக முக்கிய துறைகளில் ராணுவத்தினர் தான் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் ஜனநாயக ஆட்சியின் முக்கிய பிடி எப்போதும் மியான்மர் ராணுவத்தின் கட்டுகுள்ளேயே இருந்தது. இதுதான் ராணுவத்தின் பிடியில் இருந்து மியான்மர் தப்பிக்க முடியாமால் இருப்பதற்கான முக்கிய காரணம் ஆகும். இந்தப் பிடியை விட்டுக் கொடுப்பதற்கு ராணுவ தளபதியான மின் ஆங் லேங் எப்போதும் சம்மதித்ததில்லை. இந்த மின் ஆங் லேன் ஒரு வித்தியாசமான நபர் ஆவார். இவர் நீண்ட காலம் ராணுவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டு வந்தவர்.கடந்த 2011ம் ஆண்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சியாக மாறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளை இவர் தான் செய்து வந்தார். 2015ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று மியான்மரின் ஆட்சிப் பொறுப்பு அவரது கைகளுக்கு சென்றது. அப்போது ஆங் சான் சூகி உலக அளவில் பிரபலமடைந்தார். அவரோடு சேர்ந்து அல்லது அவருக்கு இணையாக என்று கூறும் அளவுக்கு மின் ஆங் லேங்கும் பிரபலமடைந்தார்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில் அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்ததால் அதன் மூலம் இவர் மக்களைக் கவரத் தொடங்கினார். கடந்த வருடம் நடந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவுக் கட்சி தோல்வி அடைந்த போதிலும் அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ள இவர் மறுத்தார். 2016ம் ஆண்டில் யாருமே எதிர்பாராத வகையில் தனக்குத் தானே இவர் பதவி நீட்டிப்பும் வழங்கிக் கொண்டார்.இவை அனைத்துமே மியான்மரின் ஆட்சியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தான் என்பது ஆங் சான் சூகியை கைது செய்த பின்னர் தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. தற்போது மியான்மரில் உள்ள மக்கள் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியில் உள்ளனர். நேற்று நடந்த இந்த ராணுவ நடவடிக்கைகள் ஒரு மிகப்பெரிய தடைக்கு முன்னோடியாக இருக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.