சோனு சூட் பெயரை குழந்தைக்கு சூட்டும் தம்பதி.. விழாவுக்கு வர நடிகருக்கு அழைப்பு..
கொரோனா ஊரடங்கின்போது அரசு அலுவலகங்கள் போக்கு வரத்து உள்ளிட்ட எல்லா சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடுவீதியில் தவித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகர் சோனு சூட். லட்சக்கணக்கானவர்களை மீட்டுச் சிறப்பு பஸ்களிலும் ரயிலும் விமானத்திலும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.கடந்த 2 மாதத்துக்கு முன் தனக்குச் சொந்தமான சொத்தை ரூ10 கோடிக்கு அடகு வைத்து கடன் வாங்கி தொடர்ந்து உதவிகள் செய்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேட்டாப், பள்ளிக்கு செல்ல சைக்கிள், விவசாயிக்கு டிராக்டர், வேலை இழந்தவர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் வேலை என அவர் உதவி தொடர்ந்த வண்ணம் உள்ளது.சோனுவின் உதவி மனப்பான்மையை மக்கள் புகழ்ந்தனர். ஆந்திரா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு கோயிலும் அவருக்குக் கட்டினார்கள். தற்போது தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு சோனு சூட் என பெயர் சூட்டி இருக்கின்றனர். தெலங்கானா பகுதியை சேர்ந்த கஹம்மம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு சோனூ சூட் என பெயர் வைத்தார்.
சோனு சூட் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவினார். அந்த ஞாபகமாக குழந்தைக்கு அவர் பெயரை சூட்டியதாக குழந்தையின் பெற் றோர் பண்டுகா நவீன், திரிவேணி தெரிவித்தனர். குழந்தைக்கு அன்னம் ஊட்டும் நிகழ்ச்சிக்கு சோனு சூட்டுவை நேரில் வந்து வாழ்த்த அவர்கள் அழைப்பிதழ் அனுப்பினர்.இதற்கிடையில் சோனு சூட் தற்போது ஒரு சிக்கலில் சிக்கி இருக்கிறார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்குச் சொந்தமான 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இருக்கிறது. அதை அவர் ஓட்டலாக மாற்றினார். இது சட்டத்துக்குப் புறம்பானது, மாநகராட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்று மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளை இடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த சோனு சூட் விதிமுறை எதுவும் மீறவில்லை என்றார். மேலும் அந்த நோட்டீஸை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதை கோர்ட் தள்ளுபடி செய்ததுடன் இதுகுறித்து மாநகராட்சியிடமே முறையிடும்படி கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தற்போது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.