திருமண நிகழ்ச்சியில் மறைந்த தந்தைக்கு சிலை வைத்த சகோதரி: ஆனந்த கண்ணீரில் மணமகள்!

தந்தை மறைந்தாலும் அவருக்காக மகள் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த செல்வம் என்ற தொழிலதிபருக்கு, 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் உயிரிழந்து விட்டார். இருப்பினும்,தான் உயிருடன் இருந்தபோது 2 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.

இதற்கிடையே, செல்வத்தின் 3-வது மகள் லட்சுமி பிரபாவிற்கு கிஷோர் என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தனது திருமணத்தின்போது தந்தை இல்லையே என லட்சுமி பிரபா வருத்தத்துடன் இருந்துள்ளார். சகோதரி லட்சுமி பிரபாவின் வருத்தத்தை போக்க லண்டனில் மருத்துவராக பணியாற்றும் மூத்த சகோதரி புவனேஸ்வரி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். புவனேஸ்வரி தனது கணவர் கார்த்திக் உதவியுடன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு, தனது தந்தை செல்வத்தின் முழு உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தங்கை லட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின்போது, தந்தை செல்வத்தின் முழுஉருவச் சிலையை புவனேஸ்வரி மேடையில் நிறுத்திவைத்து, தனது தங்கையும் மணமகளுமான லட்சுமி பிரபாவுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். தந்தையின் சிலையை பார்த்த லட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், அந்த சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி கூறுகையில், எனது திருமணத்தை எங்களின் தந்தை சிறப்பாக நடத்தினார். ஆனால், எனது கடைசி தங்கையின் திருமணத்தின்போது தந்தை இல்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. குறிப்பாக எனது தங்கை லட்சுமி பிரபா வருத்தத்துடன் இருந்தார். இதனால், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் செலவில், தந்தையின் சிலையை உருவாக்கினோம். இந்த சிலையை கண்ட எனது தங்கை ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தத்ரூபமான சிலையை பார்த்த உறவினர்கள் சில நிமிடம் கண்கலங்கினர் என்றார். இந்த காலத்தில் தங்கையின் வருத்தத்தை புரிந்து தந்தைக்கு சிலை உருவாக்கிய மகளை அனைத்து தரப்பினரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

More News >>