போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விவசாயிகள் சங்கம் கிராமங்களில் ஊரடங்கு, பந்த்
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு ஏற்படுத்தவும், பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களுக்கு மேல் ஆன பிறகும் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை. போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதலாக விவசாயிகள் வருவதை தடுப்பதற்காக டெல்லிக்கு வரும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து நேற்று டெல்லிக்கு புறப்பட்ட இரண்டு ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநில கிராமங்களில் ஊரடங்கு ஏற்படுத்தவும், அங்கு பந்த் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் கிராமங்களுக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் 24 மணிநேரமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே மின்சாரத் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து இன்று தேசிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிலாளர் சங்கத்தினருக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர் பேரணி நடத்த தீர்மானித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக இன்று முதல் வரும் 10ம் தேதி வரை கிராமங்களில் பிரச்சாரம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட இன்டர்நெட் தடை இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விவசாயிகள் டெல்லிக்கு வருவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகள், பெண்கள் உட்பட விவரங்களை சேகரிக்கவும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில டிஜிபிக்களிடம் டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே சிங்குவில் வைத்து போலீஸ் கைது செய்த பத்திரிகையாளர் மன்தீப் புனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக முடக்கி வைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் சங்கத்தினரின் டுவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.