அடுத்து கேரளாவுக்கு குறி பாஜக தலைவர் நட்டா இன்று கேரளா வருகை
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்பட மாநிலங்களில் எவ்வளவோ முயற்சித்தும் பாஜகவால் எந்த வளர்ச்சியும் பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் காலூன்ற பாஜக பல அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது.
கேரளாவில் நீண்ட பல வருட முயற்சிகளுக்குப் பின்னர் கடந்த 2016ல் நடந்த தேர்தலில் தான் பாஜக தனது கணக்கை தொடங்க முடிந்தது. இங்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஓ. ராஜகோபால் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுதவிர காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் தொகுதியில் பாஜகவுக்கு மயிரிழையில் வெற்றி பறிபோனது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் 84 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. மேற்கு வங்கம் உட்பட மற்ற மாநிலங்களைப் போல கேரளாவில் மற்ற கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் யாரும் பாஜகவுக்கு வர வாய்ப்பில்லை. இதனால் சிறுபான்மை ஓட்டுகளைக் கவர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பாஜக தேசிய தலைவர் இன்று கேரளா வருகிறார். முதலில் திருவனந்தபுரம் வரும் அவர், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை திருச்சூர் செல்லும் அவர், மத்திய கேரள பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை மாலை திருச்சூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.