பெட்ரோலுக்கு ராமனின் இந்தியாவில் ₹ 93 ராவணனின் இலங்கையில் ₹ 51 சுப்பிரமணிய சுவாமி கிண்டல்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. 'ராமனின் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ₹ 93, ராவணனின் இலங்கையில் ₹ 51 மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை சமீபகாலமாக மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. லாக் டவுன் காலத்தில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவது இல்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், சமீபத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது பொதுமக்களுக்கு மேலும் கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வரி விதிப்பின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மேலும் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை நம் அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.
சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியிருப்பது: ராமனின் இந்தியாவில் பெட்ரோல் விலை ₹ 93, சீதாவின் நேபாளத்தில் விலை ₹ 53, ராவணனின் இலங்கையில் விலை ₹ 51 என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறித்து சுப்ரமணிய சுவாமியின் இந்த கிண்டல் டுவிட்டர் சமூக இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது மும்பையில் பெட்ரோல் 92.56 ரூபாய்க்கும், டீசல் 86.30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.