இந்தியாவின் இளம்பெண் பைலட்.. 25 வயதில் விமானம் ஓட்டும் காஷ்மீரிப் பெண் ஆயிஷா..
இந்தியாவில் மிகக் குறைந்த வயது பெண் பைலட்டாக காஷ்மீரிப் பெண் ஆயிஷா ஆசிஷ் தேர்வாகியிருக்கிறார். காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஆசிஷ், இளம்வயதிலேயே விமானம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டார். அவர் கடந்த 2011ம் ஆண்டில் தனது 15வது வயதில் ரஷ்யாவில் உள்ள சோகோல் விமானத் தளத்தில் பயிற்சிக்காக சேர்ந்தார்.
இந்தியாவிலேயே இவ்வளவு இளம்வயதில் பைலட் லைசென்சுக்கு விண்ணப்பித்தவர் இவர்தான். அங்கு எம்ஐஜி29 ரக ஜெட் விமானம் ஓட்டி வெற்றிகரமாக பயிற்சியை முடித்த ஆயிஷா ஆசிஷ், அடுத்ததாக பம்பாய் பிளையிங் கிளப்பில் சேர்ந்தார். பம்பாய் பிளையிங் கிளப்பில் விமான ஓட்டும் துறையில் பட்டம் முடித்து, கடந்த 2017ம் ஆண்டில் வர்த்தகரீதியான விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றார். தற்போது 25 வயதாகும் ஆயிஷா, இந்தியாவிலேயே இளம் வயதுடைய பெண் பைலட்டாக வலம் வருகிறார்.
அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காஷ்மீரிப் பெண்கள் தற்போது கல்வியில் முன்னேறி வருகிறார்கள். பலரும் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு பெண்களின் கல்வி முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று குறிப்பிட்டார். காஷ்மீரில் தீவிரவாதப் பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தாலும் காஷ்மீரிப் பெண்கள் பல துறைகளில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.