மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் உயர்நீதிமன்றம் அதிரடி
கேரளாவில் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கேரளாவில் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்த இரண்டு நாட்களிலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. அரசுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பள்ளிகளும் செயல்படவில்லை. இந்நிலையில் வேலை நிறுத்தம் செய்த 2 நாட்களை விடுமுறையாக கருதி சம்பளம் வழங்க கேரள அரசு தீர்மானித்தது. இது தொடர்பாக சமீபத்தில் கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து வேலை நிறுத்தம் செய்த 2 நாட்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அரசு ஊழியரான ஆலப்புழாவை சேர்ந்த பாலகோபாலன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதில், வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்களுக்கு சட்டத்தில் இடமில்லை. இதை மீறி போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அதை மீறி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், வேலை நிறுத்த நாட்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.
ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியது சட்டவிரோதமாகும். அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உரிமை கிடையாது. அந்தப் போராட்டம் காரணமாக இரண்டு நாட்கள் அரசுப் பணிகள் முடங்கின. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கான சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு நாள் சம்பளத்தை உடனடியாக பிடித்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக 2 மாதங்களுக்குள் கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.