என்னுடைய கதையை படமாக்க வேண்டாம் கிரிக்கெட் வீரர் நடராஜன் வேண்டுகோள்

என்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையை படமாக்க வேண்டாம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வருடம் வரை கிரிக்கெட் பந்து வீச்சாளர் நடராஜன் என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் இப்போது அவரது பெயரைக் கேட்டாலே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அலறுகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே சீசனில் அரங்கேறி சாதனை படைத்தார். புதுமுக வீரராக அரங்கேறியது மட்டுமில்லாமல் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது யார்க்கர் பந்துவீச்சை கண்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து போனார்கள்.

இதனால் இவருக்கு யார்க்கர் நடராஜன் என்ற பெயரும் கிடைத்தது. நடராஜன் தமிழ்நாட்டில் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தங்கராசு ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளி. தாய் சாந்தா சாலையோரத்தில் கடை நடத்தி வருகிறார். சமீபகாலமாக வாழ்க்கையில் சிரமப்பட்டு பின்னர் சாதனை படைத்தவர்களின் கதையை படமாக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன்னாள் தடகள வீரரான பறக்கும் சிங் என அழைக்கப்பட்ட மில்கா சிங், குத்துச்சண்டையில் சாதனை படைத்த மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தோனி, டெண்டுல்கர், கபில்தேவ் உள்பட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வந்தது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கையும் சினிமாவாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது புகழின் உச்சியில் உள்ள நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாக்காரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய வாழ்க்கையை சினிமாவாக்க வேண்டாம் என்று நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், கிரிக்கெட்டில் எனக்கு இன்னும் வெகுதூரம் முன்னோக்கி செல்ல வேண்டி இருக்கிறது. அது மட்டும் தான் இப்போது என்னோட லட்சியம் ஆகும். என்னுடைய வாழ்க்கையை சினிமா ஆக்குவதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

More News >>