தி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார்
கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா விலை இப்போதை விட அதிகமாக இருந்தது. அப்போது விதிக்கப்பட்ட அதே வரியை இப்போது வசூலித்தால் கூட வெறும் 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வருகின்ற இன்றைய சூழ்நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த கடும் விலை உயர்வுக்கு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூட கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இந்த விலை உயர்வை 'கிரேட் இந்தியன் கொள்ளை' என்று வர்ணித்துள்ளார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை விவரங்கள் குறித்து அவர் விரிவான ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் காலத்தில் 2014ல் வசூலிக்கப்பட்ட அதே வரியை வசூலித்தால் கூட இப்போது லிட்டருக்கு வெறும் 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம். மேலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை 37 ரூபாய் குறையும். கடந்த 7 வருடங்களில் கச்சா எண்ணை விலை 52 சதவீதம் குறைந்துள்ளது. 2014ல் பெட்ரோலின் அடிப்படை விலையில் 50 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் இது கடுமையாக உயர்த்தப்பட்டு 200 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. 2014ல் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 105 டாலராக இருந்தது.
அப்போது பெட்ரோலுக்கு அடிப்படை விலை 48 ரூபாய் ஆகும். வரியாக 24 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோலுக்கு அப்போதைய விலை ₹ 72 ஆக இருந்தது. இந்த வருடம் பிப்ரவரியில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை 50 டாலராக உள்ளது. இதனால் இன்று பெட்ரோலின் அடிப்படை விலை ₹ 29 ஆகும். வரியாக மொத்தம் 58 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை தற்போது ₹ 87ஐ தாண்டிவிட்டது. 2014ல் 50 சதவீதமாக இருந்த வரி தற்போது 200 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014ல் வசூலிக்கப்பட்ட அதே வரியை இப்போது வசூலித்தால் கூட இந்தியாவில் 44 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கும். பெட்ரோலிய பொருட்களின் கலால் வரியை பாஜக அரசு 11 முறை உயர்த்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் தற்போதைய பட்ஜெட்டிலும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.