அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் ஊர்ஜிதம்: கோட்டாட்சியர் அறிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற கண்ணன் எந்தவித முன்பதிவு, மருத்துவ பரிசோதனை செய்யாமல் பனியனை மாற்றி முறைகேடாக கலந்து கொண்டுள்ளது கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் ஊர்ஜிதமாகி இருக்கிறது. கடந்த மாதம் 16ம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை பிடித்து விராட்டிபத்துவை சேர்ந்த கண்ணன் என்பவர் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியில் முறையாக கலந்துகொள்ளவில்லை. ஆள்மாறாட்டம் செய்து கலந்து கொண்டு இருக்கிறார் எனவே அவருக்கு வழங்கப்பட்ட பரிசு ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டாம் பரிசு பெற்ற மேலூரை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.

பின்னர் இதுகுறித்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் தமிழக முதல்வர் முதல் பரிசை வழங்க இருந்த நிலையில் அவருக்கு பரிசு வழங்கவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கோட்டாட்சியர் முருகானந்தத்திற்கு மதுரை கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார் இதன்படி கோட்டாட்சியர் முருகானந்தம் ஜல்லிக்கட்டு நடந்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி யில் ஹரிகிருஷ்ணன் என்பவர் 9.25 மணி வரை களத்தில் விளையாடி உள்ளார். ஆனால் அவர் எந்த காளைகளையும் அடக்கவில்லை.

அதன் பின்னர் எந்தவித முன்பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யாமல் வாடிவாசல் வழியாக வந்த கண்ணன் ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த 33வது எண் கொண்ட பனியனை மாற்றிக் கொண்டு ஆடு களத்தில் இறங்கியிருக்கிறார். 9.30 முதல் 9.45 மணிக்குள் இரு அவர் காளைகளை அடக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து சுற்றுகளில் பங்கேற்று மொத்தம் 12 காளைகளை அடக்கியுள்ளது வீடியோ பதிவின் மூலம் உறுதியாகி உள்ளதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அதிகபட்ச காளைகளை அடக்கி கண்ணன் முதல் பரிசு பெற்றிருந்தாலும் போட்டியில் முறையாக கலந்து கொள்ளவில்லை என்பது வீடியோ பதிவின் மூலம் ஊர்ஜிதமாகி இருக்கிறது. எனவே அறிவிக்கப்பட்டபடி அவருக்கு முதல் பரிசு பரிசு வழங்கப்படுமா இல்லையா என்பது நீதிமன்ற விசாரணையில் தான் தெரியவரும்.

More News >>