கேரளாவில் கிறிஸ்தவ நாடார்களும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் கிறிஸ்தவ நாடார்களையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவில் தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் நாடார்கள் மற்றும் எஸ்ஐயுசி பிரிவைச் சேர்ந்த நாடார்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தினரையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக இந்த சமூகத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்தது. இதற்கு முன் கேரளாவில் இருந்த எந்த அரசும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் ஓபிசி பட்டியலில் அனைத்து நாடார் பிரிவினரையும் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கிறிஸ்தவ நாடார்களும் இந்த ஓபிசி பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் இந்த சமூகத்தினருக்கும் ஓபிசி சலுகைகள் கிடைக்கும். இதற்கிடையே கேரள அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடார் சமூகத்தினரின் ஓட்டுகளை பெறவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

More News >>