கோவை: விலையில்லா பிரியாணி வழங்கும் விசித்திர கடை

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியைப் போக்க இலவசமாகவும் மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வியக்க வைக்கிறார் இளம்பெண் ஒருவர். கோவை புளியகுளம் ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ் மற்றும் சப்ரினா தம்பதியினர். சென்னையை சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை நடத்திவருகிறார். பிஎஸ்சி உளவியல் பட்டதாரியான சப்ரினா தனது வீட்டின் முன்பு சிறிய பிளாட்பார உணவகம் நடத்தி வருகிறார்.

தினமும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை செயல்படும் இந்த கடையில் சாதாரண பிரியாணி வெறும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆதரவற்ற ஏழைகளுக்கு அந்த 20 ரூபாய் கூட இல்லாமல் இலவசமாக வழங்கி வருகிறார் சப்ரினா. இலவச பிரியாணிக்காக ஒரு பெட்டியை வைத்து அதில் பார்சல்களை வைத்திருக்கிறார் சப்ரினா. அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பிரியாணி பொட்டலங்களை ஆதரவற்றவர்கள் ஏழைகள் இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து சப்ரினா, சாதாரண சாலையோர கடைகளில் பிரியாணி 50 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது.

இருப்பினும் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக மதியம் ஒருவேளை மட்டும் 20 ரூபாய்க்கு எம்.டி பிரியாணி விற்பனை செய்கிறேன். இதில் நஷ்டம் ஏதுமில்லை. விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் 15 ரூபாய்க்கு கூட பிரியாணி வழங்க முடியும் என்கிறார் சப்ரினா. 20 ரூபாய் கொடுத்து பிரியாணி வாங்க இயலாத வர்களுக்காக தனியாக பெட்டியில் இலவச பிரியாணி பொட்டலங்கள் வைத்துள்ளதாகவும் சொல்கிறார். மூன்று மாதமாக இந்த பிரியாணி கடை நடத்தி வந்தாலும் இலவச பிரியாணி திட்டம் கடந்த 4 நாட்களாக செயல்பட்டு வருகிறது. விலை இல்லாமல் உணவு வழங்க பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்க வேண்டும் என்று மனம் இருந்தால் போதும் என பெருமிதத்துடன் சொல்கிறார் சப்ரினா.

More News >>