கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட் திருமணம்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட் திருமணம் குஜராத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காகவும் இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக இவர் ஒரு டெஸ்ட் போட்டியிலும் 7 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி 20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இவர் அரங்கேறினார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக 2013ல் ஒருநாள் போட்டியிலும், இதே அணிக்கு எதிராக டி20 போட்டியிலும் இவர் அரங்கேறினார். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள இவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்காவிட்டாலும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தான் உனத்கட் கூடுதல் விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 80 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் இதுவரை 81 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது தான் இவரது சாதனையாகும்.
இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ரின்னி கன்டாரியாவுக்கும் கடந்த வருடம் மார்ச் 15ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ரின்னி வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த தகவலை உனத்கட் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 'உங்களுடைய அன்புக்கு நன்றி. எங்கள் இருவரது வாழ்க்கை பயணத்தில் உங்கள் அனைவரின் ஆசிகள் தேவை' என்று அவர் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய திருமண போட்டோ மற்றும் வீடியோக்களையும் உனத்கட் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.