பெட்ரோல் டீசல் வரிக் கொள்ளை
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது.கடந்த வருடம் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா மூலம் இந்தியாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் வேலை இழந்தும், தொழில் செய்ய முடியாமலும் கடும் அவதியடைந்தனர். பல லட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
மக்களுக்கு ஒரு புறம் பெரும் இழப்பு ஏற்பட்ட அதே நேரத்தில் மறுபுறம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. வருமான வரி, விற்பனை வரி உள்பட பல்வேறு வரிகள் மூலம் கிடைத்து வந்த வருமானம் குறைந்த போதிலும், மத்திய அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைத்து வந்த வரி கொரோனா காலத்தில் மிக அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டின் பட்ஜெட்டிலாவது பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் எனச் சாமானிய மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. சுங்க வரியைக் குறைத்து அதற்குப் பதிலாகப் புதிதாக விவசாய செஸ் வரியைச் சுமத்தியதின் மூலம் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைத்து வரும் மிக அதிகமான வருமானத்தை மத்திய அரசு இழக்க விரும்பாதது தான் இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கிய காரணமாகும்.கொரோனா காலத்தில் வருமான வரி குறைந்த போதும் கலால் வரி வருமானத்தில் 48 சதவீதம் அதிகரித்தது. இந்த காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கடுமையாகக் குறைந்த போதிலும் கலால் வரி மூலம் வருமானம் அதிகரித்ததற்கு வரி விதிப்பில் ஏற்படுத்திய உயர்வு தான் காரணமாகும். நாடு முழுவதும் கொரோனாவில் சிக்கித் தவித்த கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் கலால் வரி வருமானம் 1,96,342 கோடியாகும்.2019ல் இதே காலகட்டத்தில் இது 1,32,899 கோடியாக இருந்தது. அதாவது கொரோனா காலத்தில் கூட கலால் வரி 63,443 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் அதிக அளவு பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் விற்பனை இந்த 8 மாத காலத்தில் 1 கோடி டன் குறைவாக இருந்த போதிலும், கலால் வரி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 4.49 கோடி டன் டீசல் விற்பனையானது. ஆனால் 2019ல் இதே காலகட்டத்தில் 5.54 கோடி டன் டீசல் விற்பனையானது. கடந்த வருடம் இந்த 8 மாதங்களில் 1.74 கோடி டன் பெட்ரோல் விற்பனையானது. 2019ல் இதே காலகட்டத்தில் 2.4 கோடி டன் பெட்ரோல் விற்பனையானது.
கடந்த 2017ல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. கலால் வரியைக் குறிவைத்துத் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த வருடம் மார்ச் மற்றும் மே மாதங்களில் பெட்ரோல், டீசல் வரிகளில் ஏற்படுத்தப்பட்ட உயர்வு தான் கலால் வரி வருமான அதிகரிப்புக்குக் காரணம் என்று தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன. இரண்டு கட்டங்களாக பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 16 ரூபாயும் கலால் வரி உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கு கலால் வரி லிட்டருக்கு 32.98 ரூபாயும், டீசலுக்கு 31.83 ரூபாயாகவும் உயர்ந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்த போதிலும் அதற்கான பலன் பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. பெட்ரோல் விலையில் 39 சதவீதமும், டீசல் விலையில் 42.5 சதவீதமும் கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ல் பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு 9.48 ரூபாயும், டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு 3.56 ரூபாயாகவும் இருந்தது. 2014 நவம்பருக்கும், 2016 ஜனவரிக்கும் இடையே 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த 15 மாதங்களுக்குள் பெட்ரோலின் கலால் வரி 11.77 ரூபாயும், டீசலுக்கான கலால் வரி 13.47 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து கலால் வரி மூலம் 2014-15 காலத்தில் கிடைத்த வருமானம் 99,000 கோடியில் இருந்து 2016-17 காலகட்டத்தில் 2,42,000 கோடியாக உயர்ந்தது.
2017 அக்டோபர் 2ம் தேதி மத்திய அரசு கலால் வரி 2 ரூபாயும், அடுத்த வருடம் 1.50 ரூபாயும் குறைத்தது. ஆனால் 2019 ஜூலையில் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2020) மார்ச்சில் மீண்டும் லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதே வருடம் மே மாதத்தில் கலால் வரி பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும் டீசல் 13 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது.இந்த வருட தொடக்கத்தில் ஜனவரியில் மட்டும் 10 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. ஜனவரியில் பெட்ரோலுக்கு 2.59 ரூபாயும், டீசல் 2.61 ரூபாயும் கூட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிகமாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை பேரலுக்கு 58 டாலர் ஆக உள்ளது.
ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 29 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் சாதாரண மக்களின் சிரமம் மேலும் அதிகரித்துள்ளது.