விவசாயிகளுக்கு ஆதரவு.. வெளிநாட்டு பிரபலங்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை..
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டினர் செய்யும் பிரச்சாரங்களால், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது என்று அமித்ஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியை ஏற்றினர். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குப் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிகானா, சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், ஹாலிவுட் நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட் போட்டனர். ரிகானா தனது பதிவில், விவசாயிகளின் போராட்டச் செய்தியை இணைத்து, நாம் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை? என்று கேட்டிருந்தார். இதே போல் மற்றவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போட்டிருந்தனர். இதற்கு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:இந்திய புதிய உச்சத்தைத் தொடுவதை இது போன்ற எந்தவிதமான பிரச்சாரங்களாலும் தடுக்க முடியாது. இந்தியாவின் தலைவிதியை இப்படியான பிரச்சாரங்களால் முடிவு செய்ய முடியாது. முன்னேற்றத்தின் மூலமே இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும். முன்னேற்றத்தின் பாதையில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறவுத் துறை எச்சரிக்கையை அவர் தனது ட்விட்டில் இணைத்துள்ளார்.