மாஸ்டர் மகாத்மியம் : ஒரே ஒரு டிக்கெட்டுக்காக ஒட்டுமொத்த தியேட்டரும் புக்கிங்..
தங்க மகன் என்று ஒரு திரைப்படம். ரஜினிகாந்த் நடித்தது.அதில் கதாநாயகி பூர்ணிமா ஒரு அரங்கில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார். அதற்கு ரஜினி வரக்கூடாது என்று நினைப்பார். ஆனால் ஒட்டுமொத்த அரங்கின் டிக்கெட்டையும் ரஜினிகாந்த் புக் செய்துவிட்டு எனக்காக நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பார். நிகழ்ச்சியும் அது மாதிரி நடக்கும் சினிமாவில் வந்த இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நிஜமாகவே அரங்கேறி இருக்கிறது. அதுவும் மாஸ்டர் படத்திற்காக டிக்கெட் கிடைக்காத ஏக்கத்தில் ஒரு முழு தியேட்டரையும் புக் செய்து விஜய் படத்தை அனு அனுவாக ரசித்திருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த விஜய் ரசிகை ஒருவர் ஆஷ்லினா.
சென்னை தமிழ் பெண்ணான இவர் தற்போது மலேசியாவில் வசிக்கிறார் .இவருக்கு மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை. அதுவும் தாய் மண்ணான சென்னையில் தியேட்டரில் தான் பார்க்க வேண்டுமாம். இதற்காக அவர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வரப் பலமுறை முயன்றும் ஏதாவது ஒரு காரணங்களால் வர முடியாமல் போனது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார் ஆஷ்லினா. வந்தவுடன் முதல் வேலையாக தியேட்டரில் மாஸ்டர் படம் பார்க்கச் சென்றார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர் அண்ணாசாலையில் உள்ள ஒரு திரையரங்கிற்குச் சென்றார். அங்கு ஒரு காட்சிக்கான ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்தார்.
150 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டர் மொத்தமாக புக்கிங் செய்யப்பட்டது. தனது உறவினர்கள் நண்பர்களுக்கு இந்த விவரத்தைச் சொல்லி அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு வரவழைத்தார் தியேட்டருக்கு சென்று அவர்களுடன் படம் பார்த்து ரசித்து, மாஸ்டரை கொண்டாடினார் வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று விஜய் கத்துவதைப் போன்று கூச்சலிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார் அனைத்தையும் உடனுக்குடன் எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவிட்டார். ஏதோ ஒரு உலக சாதனையைச் செய்துவிட்டது போன்ற திருப்தியில் இருக்கிறார் அம்மணிஆஷ்லினா.