மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் நியமனம் : உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு
மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகத்தான் மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.தனியார் நிறுவனம் மூலமாக நடத்தக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகளுக்கான பணியாளர்கள் ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை கடந்த டிசம்பர் 5 ல் வெளியிடப்பட்டது. இதில் பணிபுரிய 2 ஆயிரம் பணியாளர்களை நியமனம் செய்யத் தனி அரசாணை பின்னர் வெளியிடப்பட்டது. இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவர்கள் தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட மாட்டாது. மேலும் மருத்துவர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவது சரியானதாகவும் இருக்காது.
எனவே மினி கிளினிக்குகளுக்கான பணியாளர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய 2020 டிசம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர் நியமனம் என்பது தற்காலிகமாகத்தான் நடந்து வருகிறது. மத்திய சுகாதார மையத்தின் வழிகாட்டலின் அடிப்படையில், மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே இந்த நியமனங்கள் நடக்கிறது என்றார்.
இவற்றைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனுவில் பொதுநலம் இருப்பது போலத் தெரியவில்லை. கொரோனா நோய்த்தொற்று அவசரக் காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தெரிவித்துள்ள படி மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக்குகளுக்கான டாக்டர்கள் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும். பணிக்காலம் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்." என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.