மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகள் முடக்கமா? - ஏ.டி.எம்.களில் பணமில்லாமல் பொதுமக்கள் அவதி

பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இல்லாததால், சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு முடக்குவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தில்லி, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் திடீரென ஏடிஎம்-களில் பணம் வராததால், கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளிவருவதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் முடக்குவதற்கு மோடி அரசு திட்டமிடுவதாக தகவல்கள் பரவுவதால் மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பணத்திற்காக பெரும் அலைக்கழிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

வங்கியில் மக்கள் வைப்பு செய்யும் அளவை விடவும் ஏடிஎம் மற்றும் வங்கியில் வித்டிராவல் மூலம் எடுக்கும் பணம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்களுக்குப் போதிய அளவிலான பணம் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல, மோடி அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, வங்கிகளுக்கு அளிக்கப்படும் லிக்விட் பணத்தின் அளவை குறைத்துவிட்டதும், பணத்தட்டுப் பாட்டுக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, “வழக்கத்திற்கு மாறாக சில பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளதால் இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகமாக உருவாகியுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>