சட்டமன்ற தேர்தல்: 80 கேள்விகள் கேட்டு வாக்காளர்களிடம் தேர்தல் ஆணையம் சர்வே

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு தொகுதியில் ஐந்து பூத்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பூத்தில் 10 வீடுகளுக்கு நேரில் சென்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக தேர்வு செய்யப்படும் 10 வீடுகளில் மாற்றுத்திறனாளி, 3ம் பாலினத்தவர், அரசு ஊழியர், பெண்கள் உள்ளிட்டோர் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கி இருக்கிறது. கடந்த 2016, 2019 சட்டடமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தீர்களா, இல்லையா? வாக்குச்சாவடி மையம் அருகில் உள்ளதா? வாக்களிக்க பணம் வாங்கினீர்களா,இல்லையா? வாக்களிக்கும் போது உங்களின் மனநிலை என்ன? வாக்குச்சாவடியில் இடையூறு ஏதும் ஏற்பட்டதா? தற்போதைய சூழலில் வாக்குப்பதிவில் கொரானோ தொற்று ஏற்படாமல் இருக்க என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறீர்கள்?

வாக்காளர் விழிப்புணர்வு கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து தெரியுமா, அதில் தொடர்பு கொண்டீர்களா என்பது உட்பட 80 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதிலை களப்பணியாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். முதல் கட்டமாக இன்று மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழடி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து இதற்கான பதிலை பதிவு செய்து வருகின்றனர். கே.ஏ.பி. என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இந்த பணிகள் நடைபெற உள்ளது .

More News >>