டெண்டர் கமிஷன் 20 பர்செண்ட் : அதிமுக மீது பாஜக புகார்
சேலத்தில் சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான டெண்டர் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான டெண்டர் ஒப்பந்தம் நேற்றே பேசி முடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சிலர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது.ஒன்றிய தலைவரான அதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமி முன்கூட்டியே ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி டெண்டரை முடித்து வைத்து விட்டார். மேலும் 20 சதவீத கமிஷன் என்ற பெயரில் தொகையை எடுத்து, நேற்றே உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டனர். எனவே முறைகேடாக நடந்த, இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் இதுபோன்று கமிஷன் எடுத்து பணியை ஒதுக்கினால் அது வேலை தரமற்று இருக்கும், எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆட்சியர் தலைமையில் புதிதாக டெண்டர் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.