ஆர்யா-விஷால் டிவிட்டர் மோதல்.. என் பவர் பார்ப்பாய் என எச்சரிக்கை..
ஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்கள். 2011ம் ஆண்டுகளில் ஆர்யா முன்னேறி வந்த நிலையில் விஷாலுக்குச் சரியான படங்கள் அமையாமலிருந்தது. அப்போது பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் மற்றொரு ஹீரோ பாத்திரம் இருப்பது பற்றி அறிந்து அதில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால். இதை ஆர்யாவிடம் கூற அவர் விஷாலை நேராக இயக்குனர் பாலாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்வது வைத்து அவரது விருப்பத்தைச் சொன்னார். அவரிடம் கதாபாத்திரம் பற்றி பாலா கூறினார்.
விஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு கண் மாறுகோண பார்வையானவராக நடிக்க வேண்டி இருந்ததால் அதற்கான பயிற்சி எடுத்து படம் முழுக்க அப்படியே நடித்தார். இதில் விஷாலுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றார். அதன்பிறகு ஆர்யா, விஷால் இருவரும் மாறி இருவர் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்தனர். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அமையாமலிருந்தது. அந்த வாய்ப்பு கடந்த ஆண்டு எனிமி படம் மூலம் அமைந்தது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார், ஆக்ஷன் படமான இதற்கு தமன் இசை அமைக்கிறார். விஷால் ஜோடியாக மிருனாலினி, ஆர்யா ஜோடியாக மம்தா மோகன் தாஸ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக் குழு சென்னை திரும்பியுள்ளது. சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் ஆர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. அது அவரை ஒரு தீவிரமான தோற்றத்தில் அவரை சித்தரிக்கிறது.இதைத் தொடர்ந்து ஆர்யா விஷால் இருவரும் ட்விட்டரில் அரட்டை அடித்தனர். விஷால் கூறும்போது,எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா.
இந்த படத்தில் நான் உன்னை விரும்பமாட்டேன் என்று எண்ணுகிறேன். ஆனால் என்றும் உன்னை நான் நேசிக்கிறேன். ஆனால் குறிப்பாக இந்த படத்தில் என்னுடய பவர் என்ன என்பதை எதிர்கொள்ள நீ தயாராக இரு. இந்த படத்தைப் பொறுத்தவரை நட்பை ஒரு பொருட்டாக நான் எடுத்துக் கொள்ளமாட்டேன் என்றார்.விஷாலின் இந்த டிவிட்டர் மெசேஜுக்கு பதில் அளித்த ஆர்யா, நான் மிகவும் இனிமையான எதிரி. அதை நீ என்றைக்கும் எதிர்பார்த்திருக்க மாட்டாய். ஆனால் இந்த முறை உன்னுடன் மென்மையாகவே இருப்பேன் என்றார்.