நெல்லை, பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை..

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புதிய பாதிப்புகள் குறையத் தொடங்கியது.

தமிழக அரசு நேற்று(பிப்.4) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 51,882 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 494 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. முதல் முறையாக புதிய பாதிப்பு 500க்கு கீழ் சென்றிருக்கிறது. இந்த 494 பேரையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 40,360 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 517 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 23,518 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 4 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,375 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4467 ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் தினமும் புதிதாக 150 பேர் வரையிலும், கோவையில் 80 பேர் வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். சென்னையில் நேற்று புதிதாக 149 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 58 பேருக்கும், செங்கல்பட்டு 28 பேர், கடலூர் 25 பேர், ஈரோடு 22 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 29 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.பெரம்பலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று பாதிக்கப்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 15க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

More News >>