கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் மொத்தம் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேரவை விதி 110ன் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது வருமாறு: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்றுள்ள 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.
கொரோனா கால கட்டுப்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகளின் பயிர்க் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்திருந்தது. முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு விவசாயச் சங்கங்கள் மற்றும், அரசியல் கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன. ஏற்கனவே விவசாயச் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.