வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: டிடிவி தினகரன்
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்கோவிலில் டி.டி.வி.தினகரன் இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:தமிழகத்தில் பெரிய வேதியல் மாற்றம் உருவாகும் அது எத்தனை பேரை எப்படியெல்லாம் பேச வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் . கருணாநிதி முதல்வராக இருந்தபோது கூட கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார்.இப்போது தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். இது தேர்தலுக்கான நடவடிக்கையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் . அமமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் சசிகலாவின் வருகையை எதிர் நோக்கி உள்ளார்கள். திமுகவை ஆட்சியில் வர விடாமல் தடுக்க நாங்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம். அமமுக உருவாக்கப்பட்டதே உண்மையான அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கவும் அதிமுகவை மீட்டெடுப்பதற்காகவும்தான். அமமுக அதில் நிச்சயம் வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் ஆட்சி கண்டிப்பாக மலரும், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது குறித்து போலீசில் புகார் செய்வதைக் கண்டு சிரிப்புதான் வருகிறது. கட்சி கொடி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தலையிடாது. பொதுச்செயலாளராக அவர் கொடியை பயன் படுத்தியதை யாரும் தடுக்க இயலாது . அதற்கு டிஜிபியிடம் அல்ல முப்படை தளபதியிடம் புகார் அளித்தாலும் தலையிட மாட்டார்கள். நீதிமன்றத்திடம் முறையிட்டு அவர்கள் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கட்டும் என தெரிவித்தார்.