ஹைதராபாத்தில் திறந்த சில நாட்களிலேயே தீயில் நாசமான பள்ளி
தெலங்கானா மாநில தலைநகரான பழைய ஹைதராபாத்தில் கெளலிப்பூரம் என்ற பகுதியில் உள்ள சீனிவாச உயர்நிலைப்பள்ளியில் இன்று திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. திடீரென கட்டிடம் தீ பிடித்ததால் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயந்து அலறினர். அந்த நேரத்தில் பள்ளியில் 23 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் துரிதகதியில் செயல்பட்டு அவர்களை வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பள்ளி அலுவலக அறையில் இருந்த கோப்புகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலானது. தீ விபத்து நடந்த விபரம் ஊருக்குள் பரவவே பெற்றோர்கள் அலறியடித்து பள்ளிக்கு ஓடி வந்தனர். தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர்.
கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாகப் பள்ளி மூடப்பட்டிருந்ததால் மின்சார சாதனங்களை முறையாகப் பராமரிக்கப்படவில்லை இதன் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பள்ளி ஆண்டின் பெரும்பகுதி இணையத்தில் நடத்தப்பட்டு வந்தது. அரசு உத்தரவின் பேரில் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே தீ விபத்து ஏற்பட்டது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.