விரைவில் வெளிநாட்டுக்கு பறக்கும் தல நடிகர்..

நேர்கொண்ட பாrவை படத்துக்கு பிறகு தல நடிகர் அஜீத் குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது. அத்துடன் படம் நின்றது. ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்புக்கு அரசு அனுமதி கொடுத்தும் பிறபடங்கள் தொடங்கிய நிலையில் வலிமை படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருப்பில் இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது அஜீத் கலந்து கொண்டு நடித்தார். இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ஹூமா குரோஷி நடிக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்தவர்.வலிமை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் அஜீத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்கு காலில் அடிபட்டது. அதற்குச் சிகிச்சை பெற்றுக் கொண்டு உடனே அந்த காட்சியை முடித்துக் கொடுத்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியது.

இந்நிலையில் அஜீத் தனது நண்பர்கள் சிலருடன் சமீபத்தில் வாரணாசி சென்றார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு சரித்திர புகழ் பெற்ற சாரநாத்துக்கு சென்றார். சென்னையிலிருந்து வாரணாசிக்கு அஜீத் தனது ரேஸ் பைக்கிலேயே சென்றார்.வாரணாசியில் தெருக்கடைகளில் நண்பர்களுடன் உணவை ருசி பார்த்தார். மாஸ்க், தொப்பி அணிந்திருந்ததால் அவரை யாரும் உடனே அடையாளம் காணவில்லை. தொப்பியைக் கழற்றியபோது கடைக்காரர் அவரை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். அஜீத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த படங்கள் நெட்டில் வெளியாகிக் கடந்த மாதம் வைரலானது. பிறகு அஜீத்குமார் அயோத்தியா சென்றார். சென்னையிலிருந்து சுமார் 10 ஆயிரம் கி மீட்டர் அவர் தனது பைக்கிலேயே சென்று புதிய சாதனை படைத்தார். ஐதராபாத், வாரணாசி, காங்டாக் மற்றும் லக்னோ வழியாக அவர் அயோத்தியா சென்றடைந்தார்.

வலிமை படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க முதலில் திட்டமிடப்பட்டது. எல்லா திட்டத்தையும் கொரோனா ஊரடங்கு கவிழ்த்து போட்டது. தற்போது நிலைமை மாறி வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடப்பதால் வலிமை குழுவும் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக உள்ளது. விரைவில் ஸ்பெயின் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜீத் சீக்கிரமே ஸ்பெயின் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

More News >>